விழுப்புரத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தை துவக்கி வைத்து ஆட்சியர் மோகன் பேசுகையில் போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் போதைப்பொருட்கள் வெளியிலிருந்து கொண்டு வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறையின் மூலம் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சந்தேகப்படும்படியான நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து போதைப்பொருட்கள் கடத்தி வருவதை கண்டறிந்தால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் கடல்வழி மார்க்கமாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க கடலோர பாதுகாப்புப்படையின் மூலமும், ரெயில்கள் மூலம் எடுத்துச்செல்வதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களை முற்றிலும் தடுக்க பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். தவறுகள் நடப்பது தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்வழியில் சென்றிட வேண்டும். பள்ளிகளில் தவறுகள் நடப்பதற்கு பல்வேறு சந்தர்ப்ப காலச்சூழ்நிலைகள் உருவாகின்றன. அதை தடுப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். நடவடிக்கை மாணவர்களின் மனநிலை மாற்றங்கள் உங்களால் எளிதாக அறிய முடியும். அதுபோன்ற நிலையில் அந்த மாணவருக்கு தக்க அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் தவறுகள் நடப்பது அல்லது கண்டும்காணாமல் மாணவர்களை வெளியில் அனுமதிப்பது போன்ற செயல்கள் நடந்தாலும், மாணவர்களிடம் போதைப்பொருளின் பயன்பாடு கண்டறிந்தாலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கல்வித்துறை அதிகாரிகள், இதற்கென குழுக்கள் அமைத்து அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.