திருவிழா தொடர்பான இருதரப்பு மோதலில் சமரசம்
விழுப்புரம் அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பு மோதல், அதிகாரிகள் நடவடிக்கையால் சமூகமாக முடிந்தது.;
விழுப்புரத்தில் கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. விழுப்புரம் சாலாமேட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை கிராம மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் கோவில் இடம் சம்பந்தமாக ரயில்வே துறையிடம் இழப்பீடு பெறுவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இக்கோவில் திருவிழா இரண்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) செடல் உற்சவம் நடக்கிறது. இத்திருவிழாவில் ஒரு தரப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொரு தரப்பினர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் திருவிழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டாட்சியர் ஆனந்தகுமார், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ஆனந்தன்,பரணிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சாலாமேடு பகுதியை சேர்ந்த இரு தரப்பினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் ஒற்றுமையாக திருவிழாவை நடத்துவோம் என்று இருதரப்பினரும் உறுதியளித்தனர். இதனால் இக்கூட்டம் சுமூகமாக முடிந்தது.