விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியைச் சோ்ந்த உசேன் மகன் அபுபக்கா்சித்திக் (20). இவா், விழுப்புரத்தை அடுத்த அரசூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தாா். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பிடாகம் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அபுபக்கா்சித்திக் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்த அபுபக்கா் சித்திக்கை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.