விழுப்புரத்தில் கால்நடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சுற்றி திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
அதன்படி விழுப்புரம் எம்.ஜி ரோடு,திரு.வி.க.ரோடு,பாகர்ஷா தெரு,அங்காளம்மன் கோவில் தெரு,நேரு வீதி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை,ஆஸ்பிட்டல் ரோடு, புதிய பஸ் நிலையம்,பழைய பஸ் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் அதிகமான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டறிந்து,அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்திலோ,தொழுவத்திலோ மாடுகளை பராமரித்திட வேண்டும் என கடந்த 20.10.2021 மற்றும் 21.11.2021 அன்று மாட்டின் உரிமையாளர்களுக்கு விழுப்புரம் நகராட்சி வாயிலாக அறிவிப்பும், விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த அறிவிப்புகளை மாட்டின் உரிமையாளர்கள் பின்பற்றாமல், கடைபிடிக்காததால் மாடுகள் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கு மீண்டும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையின் அறிவுறுத்தலின்படி காவல்துறை,வருவாய் துறை உதவியுடன் நகராட்சி பணியாளர்கள் மூலம் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு நகராட்சி பூங்காவில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும்,
சம்மந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதன் முறையாக ரூ.5,000 அபராதத்தினை மூன்று நாட்களுக்குள் செலுத்தி உறுதிமொழி ஆவணம் சமர்பித்து,மாடுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மாட்டின் உரிமையாளரகள்; மாடுகளை பெற்றுக்கொள்ளவில்லையெனில் நகராட்சிக்கு அருகில் உள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அத்தொகையினை நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும்.
மேலும் இந்நடைமுறைகளை பின்பற்றாமல் கால்நடை உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களுடைய மாடுகளை நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், நகராட்சி பணியாளர்களால் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கால்நடைகள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.