விழுப்புரத்தில் ஆட்சியர் ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார்

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை ஆட்சியர் மோகன் வழங்கினார்.;

Update: 2022-01-26 11:15 GMT

பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்றகுடியரசு நாள் விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.மோகன், தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் (26.01.2022) புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.மோகன் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசிய கொடியின் மூவர்ண வண்ண பலூன்களையும், சமாதனத்தை பறைசாற்றும் விதமாக புறாக்களை பறக்க விட்டார். பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து,54 ஆயிரத்து,997 மதிப்பீட்டில் மின்கலன்களால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், இணைப்புச் சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரத்து,400 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளும், வேளாண்மைத்துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரத்து,232 மதிப்பீட்டில் தார்பாலின், விசைத் தெளிப்பான் மற்றும் கைத் தெளிப்பான் கருவிகள் என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.11 லட்சத்து,25 ஆயிரத்து, 629 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 355 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணியை பாராட்டும் விதமாக நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் தியாகத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்படத் தொகுப்பு கண்காட்சியினை பார்வையிட்டார்.

குடியரசு நாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், பாண்டி செல்லும் சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, குடும்பத்துடன் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, இந்திய திருநாட்டில் விடுதலைக்காக அரும்பாடுபட்டு அர்ப்பணித்துக்கொண்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மறைந்த அபரன்ஜி குப்தா, கிருஷ்ணன் ஆகியோரின் தியாகங்களை போற்றும் வகையில், வாரிசுதாரர்களான கோலியனூரில் வசிக்கும் சுலோச்சனா, சாரதாம்பாள் ஆகியோரின் வசிப்பிடத்திற்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அப்போது, ச திருமதி.சுலோச்சனா தனது சொந்த சேமிப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.ஆர்.பூர்ணிமா, மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.ஜீ.சாந்தி (மகிளா நீதிமன்றம்), மாண்புமிகு தலைமையியல் குற்றவியல் நீதிபதி எஸ்.கோபிநாதன், நீதிபதி நடுவர் எண்.1 அருண்குமார், நீதித்துறை நடுவர் எண்.2 திருமதி.எஸ்.பூர்ணிமா, விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் பாண்டியன்,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா,உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) டிராவ் கரும் உத்தாராவ்,மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News