புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலைப் பணியை கலெக்டர் மோகன் ஆய்வு

விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலைப் பணியை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

Update: 2022-11-25 16:15 GMT

 ஜானகிபுரத்தில் 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பிலான மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஜானகிபுரத்தில் 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் பொருட்டு பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைக்கவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைக்கவும், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதை கட்டுப்படுத்திடும் பொருட்டு தற்காலிகமாக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

மேலும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்ற தலைக்கவசங்கள் வழங்கவும், பிரதிபலிக்கும் பட்டை உடைய ஆடைகளை அணிந்து பணியாற்றுமாறும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதோடு வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் நெரிசல் இல்லாமல் செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்,

இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் விழிப்புணர்வு ஸ்டிக்கர், பதாகைகள் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகாய் திட்ட இயக்குனர் சக்திவேல், திட்ட மேலாளர் குமரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, வடகிழக்கு பருவ மழையால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து உள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் வரத்துகள் மற்றும் வடகிழக்கு பருவமழை ஏற்படும் அபாயங்கள் குறித்து நேரில் சென்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழையின் போது அபாயகரமான பகுதியில் கூட தற்போதைய நிலையில் எந்த விதமான பாதிப்பும்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News