அடுக்ககம் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அடுக்ககம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-21 12:15 GMT

மாவட்ட ஆட்சியர் பழனி.

இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் பழனி  வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் வேளாண் அடுக்ககம் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது விவரங்களை கிரெய்ன்ஸ் (Growers online Registration of Agricultural input system) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து சாகுபடி நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெய்ன்ஸ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் பெரிதும் பயனடையும் வகையில் செயலாற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய 13 துறைகள் இணைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும். ஒற்றை சாளர இணையதளமாக செயல்படுவதால் ஒரே இடத்தில் பதிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். விவசாயிகள் அரசிடமிருந்து இதுவரை பெற்ற நலத்திட்ட உதவிகளை நேரடியாக தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விண்ணப்பிக்கும்போதும், விவசாயிகள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

நிதி சார்ந்த நலத்திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், மேற்குறிப்பிட்ட அரசு துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனே ஒப்படைத்து கிரெய்ன்ஸ் வலைதளத்தில் தங்களது அடிப்படை விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News