விழுப்புரத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
77 மாத ஓய்வூதிய அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார். டிஎன்ஜிபிஏ ரா.பொன்முடி,டிஎன்இபிடபயுஓ சங்கத்தின் மாநில செயலாளர் தங்க.அன்பழகன், மாவட்ட செயலாளர் எம்.புருசோத்மன், டிஎன்எஸ்டிசி- ஆர்டபிள்யுஏ சங்கத்தின் மாநில உதவி செயலாளர் அ.சகாதேவன், மாவட்ட பொருளாளர் ப.சேஷையன், ஏஐபிடிபிஏ மாநில துணைத்தலைவர் பி.மாணிக்கமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் என்.மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் களுக்கு கொடுக்கவண்டிய 77 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிளைத்தலைவர் எஸ்.பி.ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.தியாகராஜன், சத்துணவு அங்கன்வாடி கோ.கமலா, உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் கிளைத் துணைத் தலைவர் என்.கல்வராயன் அனைவருக்கும் நன்றி கூறினார்.