விழுப்புரத்தில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக முன்பு சி ஐ டி யு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற்சாலை உற்பத்தி பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், அரசு, பொதுத்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையை புகுத்தும் தமிழ்நாடு அரசின் அரசாணைகள் 115, 139,152-ஐ ரத்து செய்ய வேண்டும், அனைத்துப்பகுதி தொழிலாளர்களுக்கும் நகரம், கிராமம் என்று பாராமல் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் குமார், மின்வாரிய தொழிற்சங்க மாநில செயலாளர் அம்பிகாபதி, அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரகோத்தமன் ஆகியோர் விளக்கி பேசினர்.
இதில் நிர்வாகிகள் சேகர், அருள்ஜோதி, கணபதி, மலர்விழி, முருகன், ராஜாராம், முரசொலி, நிஷாந்தி, ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று, பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறைஒழித்து தற்போது வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.