விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பாதுகாப்பு குழு அமைக்க சி.இ.ஓ. உத்தரவு

Security Committee -விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு கல்வி குழு அமைக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.;

Update: 2022-08-05 01:57 GMT

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Security Committee - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 271 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கினார். அவர் கூறுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி ஆணையர், இணை இயக்குனர்கள் வருகிற 10, 11-ந் தேதிகளில் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதால் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளாகம், கழிவறை தூய்மை உள்ளிட்ட பணிகள் சரிசெய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பேருந்து வசதி பற்றாக்குறை இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலம் போக்குவரத்துத்துறையை தொடர்புகொண்டு பேருந்து வசதியை தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மழைக்காலம் தொடங்க உள்ளதால் பள்ளிகளில் உள்ள மரங்களில் தேவையற்ற கிளைகளை களைந்து மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்தல் வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான குழுவை அமைத்திருத்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 வகுப்புகளை உற்றுநோக்குதல் வேண்டும். அனைத்து வகுப்புகளிலும் சரியான முறையில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை இ.எம்.ஐ.எஸ். என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லையெனில் தலைமையாசிரியர்கள் உடனடியாக அம்மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு உரிய ஆலோசனை வழங்கி அம்மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர்கள், தேவையில்லாமல் வெளியில் செல்கிறார்களா என்பதை உடற்கல்வி ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளியின் நுழைவுவாயிலை பாதுகாப்பு கருதி பூட்டி வைத்திடல் வேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான முடித்திருத்தம், முறையான சீருடையில் பள்ளிக்கு வருகைப்புரிவது குறித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டிவனம் கிருஷ்ணன், விழுப்புரம் (பொறுப்பு) காளிதாஸ், செஞ்சி (பொறுப்பு) சுப்புராயன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் கோகுல், வெங்கடேசபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News