தலித் மக்களுக்கு பேருந்து நிழற்குடை: சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் ஊராட்சியில் டெலிட் மக்கள் பேருந்து பயணத்திற்கு நின்று ஏறும் இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் சிபிஎம் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்
சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கண்ணதாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சௌந்தரராஜன், எம்.பழனி ஆகியோர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் பழனியிடம் திங்கட்கிழமை ராம்பாக்கம் ஊராட்சியில் பொது சாலையோரம் தலித் மக்களின் பயன்பாட்டுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை பணியை தடுத்து வரும் ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுத்து நிழற்குடை பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ராம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரிபாதி அளவில் தலித் மக்களும் மற்ற ஆதிக்க சாதியினரும் வசித்து வருகின்றனர், இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் பொது இடத்தில் வெற்றி பெற்று தற்போது தலைவராக உள்ளார். இங்கு ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தனித்தனியே இருந்து வருகிறது.
இந்நிலையில் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி போக்குவரத்து சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இங்கு இருந்து தான் அவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற ஆதிக்க சாதியினர் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தான் பேருந்து ஏற வேண்டும். இந்நிலையில் அவர்கள் கால்நடையாக காலம்காலமாக நடந்து வந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி ஊர்களுக்கு பயணம் செய்ய ஆதிக்க சாதிகளின் ஏரியா வழியாக செல்லும் சாலையில் பேருந்துகள் வரும் வரை கால் தடுக்க நிழல் கூடம் இல்லாமல் வெயில் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் நனைந்தவாறு பேருந்துகள் வரும் வரை காத்திருந்து பயணம் செய்யும் அவல நிலை, தலித் மக்களுக்கு இதுவரையிலும் நீடித்து வருகிறது.
இந்நிலையை போக்கும் வகையில் வானூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ நிதியிலிருந்து தலித் பகுதி மக்கள் வந்து காலம் காலமாக நின்று நிழலுக்கு கூட ஒதுங்க முடியாமல் காத்துக் கிடந்து பேருந்து ஏறிய பொது இடத்தில் அவர்கள் நிழலில் நின்று பயணம் செய்யும் வகையில் பேருந்து நிழற்குடை கட்டும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த இடத்தில் பேருந்து கட்டுமான பணி கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் போதெல்லாம் அப்பகுதி ஆதிக்க சாதிகள் அதனை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பேருந்து நிழற்குடை கட்டுமான பணி தொடங்க அந்த இடத்தை அளக்க சர்வேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்தனர், அந்த அரசு பொது இடத்தை தங்கள் சொந்த இடங்கள் என்று கூறி ஆதிக்க சாதியினர் தடுத்து, நிழற்குடை கட்டுமான பணியை செய்ய விடாமல், அந்த அரசு பொது இடத்தில் தன்னிச்சையாக ஊராட்சி அனுமதியின்றி அவர்களாகவே ஆதிக்க சாதியினர் கடைகள் கட்டுவதற்காக முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான பள்ளம் தோண்டி பணியை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து ஆதிக்க சாதியினர் அத்துமீறி நடத்தும் பணியை தடுத்து உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளிடம் ஆதிக்கச் சாதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலித் மக்களுக்கு நிழற்குடை இங்கு கட்ட கூடாது என தடுத்து வருகின்றனர்.
அந்த ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தலித் மக்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு தேர்தல்களாக பொதுவில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு, அந்த ஊராட்சியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் ஒரு தலித் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் தலித் மக்கள் இங்கு வந்து அமர்ந்து பேருந்துகளில் ஏறி செல்லும் அளவில் நிழற்குடை நம் பகுதியில் கட்டுவதா என தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இங்கு நிழற்குடை கட்டிவிட்டால் அவர்கள் நமக்கு சமமாக நம் கண் முன்னே கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்ற மூடநம்பிக்கையில் ஊறிபோயி இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர், ஆனால் காலம் காலமாக தற்போது நிழற்குடை அரசு கட்டபோகும் இடத்தில் இதுவரை நிழற்குடை இல்லாமலேயே அங்கு சாலையோரம் இருந்த வேப்பமர நிழலில் நின்று பேருந்து ஏறி பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் ஆதிக்க சாதியினரின் ஆதிக்க வெறி தலைக்கு ஏறி அங்கு இருந்த வேப்பமரத்தின் கிளைகளை நிழல் இல்லாமல் கழித்து, அங்கு ஒரு சாமி என கூறி, எந்த அனுமதியும் இன்றி, அத்துமீறி வேளி அமைத்து உள்ளனர்.
இதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த இடம் அரசுக்கு சொந்தமான பொது இடம் எனக் கூறப்படுகிறது, ஆனால் அந்த இடத்தில் தலித் மக்கள் நின்று பேருந்து ஏறுவதை விரும்பாமல் ஆதிக்க சாதியினர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தலித் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்படவுள்ள நிழற்குடை கட்டுமானப் பணியினை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அந்த ஊராட்சியில் தற்போது ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் அந்த பொது இடத்தில் நிழற்குடை கட்டுமான பணியை ஆரம்பித்து கட்டி முடிக்க தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில் சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.