ஓய்வூதியம் வழங்குவதற்கு லஞ்சம் -கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி புகார்

ஓய்வூதியம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.

Update: 2022-08-02 12:48 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த மூதாட்டி.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே ரவணம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி முனியம்மாள் (வயது 80). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் எனது கணவரும், ஒரே மகனும் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. நான் கடந்த 2009-ல் இருந்து அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தேன். செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் தனியாக மாற்றப்பட்ட பிறகு 3 முறை எனது உதவித்தொகையை நிறுத்தினார்கள். முதல் முறை வங்கி கணக்கு தவறு என்றும், 2-வது முறை ஆதார் எண் தவறு என்றும், தற்போது நான் இறந்து விட்டதாகவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதுகுறித்து அவலூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது உங்களுடைய இறப்பு பதிவு இல்லை என்றும், அந்த உதவித்தொகை எண் வேறு என்றும் கூறுகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அவலூர்பேட்டையை சேர்ந்த ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒரே பிரிவில் பணிபுரிகிறார். அவர் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு முறையாக உதவித்தொகை பெறுபவர்களை நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் புதியவர்களை நியமனம் செய்கிறார். புதியவர்களை சேர்ப்பதற்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம்  பெறுகிறார்கள். முறையாக உதவித்தொகை வாங்கியவர்கள் பணம் வரவில்லை என்று கேட்டால் அவர்களிடமும் ரூ.3 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறியிருந்தார்.

மனுவை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags:    

Similar News