விழுப்புரம் நகர்மன்ற கூட்டத்தில் பாஜக அதிமுக வெளிநடப்பு
விழுப்புரத்தில் நகர் மன்ற கூட்டத்தில் பாஜக, அதிமுக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகர்மன்றக்கூட்டம் புதிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா முன்னிலை வகித்தார்.
புதிய அலுவலகத்தில் கூட்ட அரங்குக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரியும் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர் வடிவேல் பழனி ஆகியோர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில், 1 முதல் 42 வார்டுகளில் தெருவிளக்குகள் பொருத்துதல் பணிக்கு ரூ.33.70 லட்சம், குடிநீர்ப் பணிகளுக்காக ரூ.22.60 லட்சம், சாலைப்பணிகளுக்காக ரூ.36.75 லட்சம், வடிகால் பணிகளுக்காக ரூ.20.45 லட்சம், நூலகம், அங்கன்வாடி, கருமாதி கொட்டகை உள்ளிட்ட கட்டடப்பணிகளுக்காக ரூ.34 லட்சம், நமக்கு நாமே திட்டத்துக்காக ரூ.21 லட்சம் என மொத்தம் ரூ.1.68 கோடிக்கான பணிகளுக்கு ஒப்புதல் அளித்தனர்.