விழுப்புரத்தில் பிட்காயின் போல், ரேடான் காயின் மோசடி புகார்
விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிட்காயின் போல் ரேடான் காயின் ரூ. 2 கோடி மோசடி செய்தவர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்.;
விழுப்புரம், திருமலை நகரைச் சேர்ந்த முகமது அக்பர்(52) என்பவர் தலைமையில், ஸ்டாலின் நகரைச் சேர்ந்த கங்காதரன் மற்றும் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்த்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் டெய்லர் தொழில் செய்து வந்தேன். கடந்த 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவர் அறிமுகமானார். அவர் தான் கிரிப்டோகரண்சி, பிட் காயின் போன்று 'ரேடான்' என்னும் திட்டத்தில் முதலீடு செய்து பல லட்சங்கள் சம்பாதித்ததாகவும், இதில் முதலீடு செய்தால் மிக விரைவில் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறினார்.
இதனை நம்பி வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3 லட்சம் முதலீடு செய்ததுடன் எனக்கு தெரிந்த நபர்களையும் முதலீடு செய்ய வைத்தேன். விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் மட்டும் ரூ.80 லட்சம் வரை கட்டியுள்ளனர். ஆனால் கட்டிய பணம் திரும்பவும் வரவில்லை. அவரிடம் கேட்டபோது விரைவில் பணத்தை தருவதாக கூறிவந்தார். ஆனால் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதேபோன்று திருக்கோவிலூர், செஞ்சி, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த வேணுகோபால் ரேடான் திட்டத்தில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வேணுகோபாலை கைது செய்து பணத்தை மீட்டு தர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தனர்.