விழுப்புரத்தில் ரயில்வே போலீசார் நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்
விழுப்புரத்தில் ரயில்வே போலீசார் சுதந்திர தின அமுத பெருவிழா விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டனர்.;
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை திண்டிவனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனை ஜோதியம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் ரெயில் நிலைய மேலாளர் மருதமுத்து முன்னிலை வைத்தார். இதில் நாட்டின் ஒற்றுமை உயர்வடைய வேண்டி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் 50 போலீசாரும், நேரு தேசிய இளைஞர் அமைப்பின் அமைப்பாளர் காந்தி தலைமையில் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டமானது ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ரெயில் நிலையத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.