கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
செஞ்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி மொடையூர் ஆற்று பாலம் அருகே காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே உள்ள ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 34). இவா் சென்னையில் தங்கியிருந்து ஓட்டல் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் மகள் சசிகலா (27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அவர் பேச முடியாமல் சிரமப்பட்டார். இந்த நிலையில் போலீசார், சத்யராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேப்பர் ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து எழுதி போலீசாரிடம் கொடுத்தார். அதில், எனது மனைவி சசிகலாவுக்கும், எங்கள் ஊரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதையறிந்த நான் அவர்களை கண்டித்தேன். இதனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை கொலை செய்வதற்காக எனது கழுத்தை கத்தியால் அறுத்தனர் என்று அதில் கூறியிருந்தார்.
இதற்கிடையே சத்யராஜ் சிகிச்சை பெறுவது பற்றி அறிந்த சசிகலா தனக்கு எதுவும் தெரியாதது போல் ஆஸ்பத்திரிக்கு கணவரை பார்க்க வந்தார். அப்போது அவருடன் ஜானகிராமனும் வந்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் சசிகலா முதலில் சத்யராஜை காதலித்துள்ளார். அதன் பிறகு ஜானகிராமனையும் காதலித்து வந்துள்ளார். அதாவது ஒரே நேரத்தில் இருவரையும் சசிகலா காதலித்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சசிகலாவுக்கும், சத்யராஜிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் சசிகலா, ஜானகிராமனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை சத்யராஜ் கண்டித்ததால், அவரை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து சசிகலா திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்கிடையே சம்பவத்தன்று விடுமுறையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சத்யராஜை, தன்னை நாட்டார்மங்கலம் கூட்டுரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஸ்கூட்டரை எடு்த்து வருமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த சசிகலா திட்டமிட்டார். அதன்படி, அவர் ஜானகிராமனை மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்திற்கு ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். பின்னர் ஜானகிராமனை அங்கு மறைவாக நிற்க வைத்துவிட்டு சசிகலா தனது கணவரை அழைத்து வர நாட்டார்மங்கலம் கூட்டு ரோட்டுக்கு சென்றார். பின்னர் சத்யராஜை அழைத்துக்கொண்டு மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகில் வந்தவுடன் ஸ்கூட்டரை சசிகலா நிறுத்தினார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த ஜானகிராமன் கண்ணிமைக்கும் நேரத்தில் சசிகலாவுடன் சேர்ந்து சத்யராஜியின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
பின்னர் அவரை பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளிவிட்டு அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜானகிராமன், சசிகலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே செஞ்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சத்யராஜ், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதல் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.