அரசு பேருந்து நடத்துனர் மீது மாணவர் தாக்குதல் : போலீஸார் சமரசம்

விழுப்புரம் அருகே அரசு நகர பேருந்து நடத்துனரை மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-03-29 07:45 GMT

பைல் படம்

விழுப்புரத்தில் படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கலித்திராம்பட்டுக்கு அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது,. இந்த பேருந்து, புதுச்சேரி மார்க்கத்தில் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு கல்லூரி மாணவர்கள் பலரும் ஏறினர். அவர்களில் சில மாணவர்கள், பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இதைப் பார்த்த பேருந்து நடத்துனர் பெருங்கலாம்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவர், அந்த மாணவர்களிடம் பேருந்தின் உள்ளே வருமாறு கூறினார். ஆனால் அதை அம்மாணவர்கள் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். தொடர்ந்து, நடத்தினர் சொல்லிப்பார்த்தும் அந்த மாணவர்கள் கேட்கவில்லையாம்.

ஒருகட்டத்தில் பேருந்து நடத்துனரிடம் கல்லூரி மாணவர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவர், திடீரென பேருந்து நடத்துனர் கோவிந்தசாமியின் கன்னத்தில் அறை விட்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவர், பேருந்தை அங்கேயே நிறுத்தி அம்மாணவர்களை கீழே இறக்கிவிட்டு, இதுபற்றி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடமும், பேருந்து நடத்துனரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அங்கிருந்து அந்த பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News