விழுப்புரம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஏற்பாடுகள் தயார்

TNPSC Exam 2022- விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-23 02:15 GMT

மாவட்ட ஆட்சியர் (பொ) பரமேஸ்வரி.

TNPSC Exam 2022- இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் (பொ) பரமேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு, நாளை 24ந்தேதி  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 09 வட்டங்களில் 207 தேர்வு மையங்களில், 68,244 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். வினாத்தாள்களை கொண்டு செல்ல 53 நடமாடும் குழுக்களும் (Mobile Team), தேர்வினை கண்காணித்திட தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையிலான 27 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தரைதளத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று தடையின்றி மின்சாரம் காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வழங்கிட விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமூகமாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால், தேர்வர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர்  (பொ) பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News