விழுப்புரத்தில் நிதி நிறுவன ஊழியர் கழுத்து அறுத்து படுகொலை

விழுப்புரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-08-23 01:09 GMT

கொலை செய்யப்பட்ட மரிய பிரபாகரன்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (வயது 32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மருத்துவமனை அருகில் முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அங்கு அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதை பார்த்த பொதுமக்கள், விழுப்புரம் நகர போலீசாருக்கும் மற்றும் மரியபிரபாகரனின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மரியபிரபாகரனின் குடும்பத்தினர் அங்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

மரியபிரபாகரனை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதோடு கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, மரியபிரபாகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வளவனூர் அருகே சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்த ஒருவரை பணம் கட்டவில்லை என்பதற்காக ஒருமையில் திட்டியுள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மரியபிரபாகரன் மீது அவர்கள் வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதேபோன்று அவர், பணம் கட்டாத பலரையும் ஒருமையில் திட்டி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் யாரேனும் மரியபிரபாகரனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் மரியபிரபாகரன் அடிக்கடி தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து மது அருந்தும்போது போதை தலைக்கேறியதும் நண்பர்களை திட்டுவார். அவ்வாறு மது அருந்துவதில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News