ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக தொண்டர்கள் ஏமாறமாட்டார்கள்: சி.வி.சண்முகம்
ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள் என அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக 50- வது பொன்விழா ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி.சண்முகம் கலந்து கொண்டு ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய துணிகள் வழங்கி, உணவு அளித்தார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியில் மூத்த முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து, மரியாதை செய்து பரிசுகள் வழங்கி பேசுகையில், அதிமுக கருணாநிதிக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களால் ஆரம்பிக்கப்பட்டது, அதில் எம்ஜிஆர் தன்னை இணைத்துக் கொண்டு வளர்த்தெடுத்தார், அதனை அம்மா கட்டி காப்பாற்றினார். அவர் சொன்ன வார்த்தை படி ஆயிரம் கருணாநிதி, நூறு ஸ்டாலின் வந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு அவருக்கு பின்பு அதிமுகவை அழிக்க முடியாது.
வெற்றி தோல்வி புதிதல்ல. 96 ல் சந்தித்த படுதோல்வியை விட 2021 ல் இல்லை, அப்பொழுதே அதிமுக மீண்டும் எழுந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது, அதிமுக 49 ஆண்டுகளில் 30 ஆண்டு ஆட்சியில் இருந்த கட்சி, எம்ஜிஆர்,அம்மா தொண்டர்கள் இருக்கும் வரை தோல்வி நிரந்தரம் இல்லை,
நாஞ்சில்மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன்,எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் நாங்கள் இல்லை என்றால் கட்சி இல்லை என்று வெளியேறி மீண்டும் அதிமுகவிற்கே வந்து அம்மாவிடம் சரணடைந்தனர், சில புல்லுருவிகள், துரோகிகளுக்கு இங்கு இடமில்லை, அவர்களின் பொய் முகங்களை என்றும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஓராயிரம் சசிகலா வந்தாலும், இனியும் அதிமுக தொண்டர்களை ஏமாற்ற முடியாது, போய் அமுமுகவை காப்பாற்ற சொல்லுங்கள், இனியும் அதிமுக தொண்டர்கள் ஏமாற தயாராக இல்லை என பேசினார், அப்போது அதிமுக நிர்வாகிகள் எம்எல்ஏ சக்ரபாணி, ஆர்.பசுபதி, வண்டிமேடு இராமதாஸ், மாணவர் அணி சக்திவேல், திருப்பதி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.