போலி வாரிசு சான்றிதழ் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை: மூதாட்டி ஆட்சியரிடம் மனு
போலி வாரிசு சான்றிதழ் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
விழுப்புரத்தை மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள தொடர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள் (வயது 90). இவர் தனது வளர்ப்பு மகன் தனசேகரன், உறவினர்கள் ராஜேந்திரன், ராஜதுரை ஆகியோரின் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில், அவர் எனது கணவர் ராமலிங்கமும், நானும் சேர்ந்து தனசேகரன் என்பவரை வளர்ப்பு மகனான தத்தெடுத்தோம். எனது கணவர் இறந்தபிறகு மகன் தனசேகரன் அரவணைப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். எங்களது பரம்பரையின் மூலம் கிடைக்கப்பெற்ற அனைத்து நிலங்களையும், வீட்டையும் தனசேகரன் தனது பெயரில் வரியை செலுத்தி பராமரித்து வந்தார். அவர் வெளியூர் சென்று பணிபுரிந்து வந்த சமயத்தில் விழுப்புரம் பானாம்பட்டில் உள்ள 1 ஏக்கர் 5 செண்ட் நிலத்தை எழுத்துப்பூர்வமாக குத்தகை ஆவணம் மூலம் பயிர் செய்த காசிநாதன் மகன் சுந்தரராஜன் என்பவர், எழுத படிக்கத்தெரியாத என்னை வருவாய்த்துறையினருடன் கூட்டுசதி செய்து நானோ, எனது மகனோ விண்ணப்பித்து பெறாத ராமலிங்கத்தின் இறப்பு சான்று, வாரிசு சான்றினை மோசடியாக தயார் செய்து அந்த நிலத்தை அபகரித்துக்கொண்டார். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து கடந்த 2020-ல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்ததன்பேரில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய விழுப்புரம் தாசில்தார் வெற்றிவேல், வளவனூர் வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஜாமீன் மனுவும் விழுப்புரம் கோர்ட்டில் 2 முறை நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மோசடி குறித்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு புகார் அனுப்பினேன். அதன்பேரில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையரிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் இதுவரையிலும் அவர்கள் இருவரின் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் மேலும் பதவி உயர்வில் சென்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.