விழுப்புரம் அருகே பழமையான விசிறி பாறை காப்பாற்றப்படுமா
விழுப்புரம் அருகே உடைய நத்தத்தில் உள்ள விசிறி பாறை காப்பாற்றப்படுமா எனக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
அழியும் நிலையில் விசிறி பாறை காப்பாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
விழுப்புரம் அருகே அழிந்து வரும் விசிறிப்பாறையை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே உள்ள உடையாநத்தம் கிராம எல்லையில் அடர்ந்த காப்புக் காட்டுக்குள்ளே மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றுத்தடயம் ஒளிந்து கொண்டிருக்கிறது. நேரில் சென்று பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாய், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் கைகளை விரித்தாற்போல் காணப்படும்.
இந்த தட்டையான ஒற்றைக்கல் பாறையைத்தான் அப்பகுதி மக்கள் விசிறிப்பாறை என்று அழைக்கின்றனர். இது தாய் தெய்வ வழிபாட்டின் அடையாளம் என்றும், கீழ்வாலைப்பாறை ஓவியத்தில் இடம்பெற்றுள்ள தாய் தெய்வத்தின் மூல உருவமாகவே தோன்றுகிறது என்றும் கடவுள் அன்னையின் உருவம் என்பதும் பல்வேறு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்களின் கருத்தாகவும், சான்றாகவும் உள்ளது.
இந்த விசிறிப்பாறையின் வயது 5,000 ஆண்டுகள் இருக்கலாம் என ஆய்வு சொல்கிறது. அந்தளவுக்கு வரலாற்று தொன்மை வாய்ந்த இந்த விசிறிப்பாறை தற்போது புதருக்குள் சிக்கி இருக்குமிடம் தெரியாமல் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது.குறிப்பாக இந்த விசிறிப்பாறையின் இடது கையில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அளவுக்கு காணப்படுகிறது.இந்த விசிறிப்பாறை பழமையின் பெருமையை பேசினாலும் தொல்லியல் துறையின் கண் பார்வை, ஏனோ இன்னமும் இதற்கு கிடைக்கவில்லை என்பதுதான், வேதனையாக உள்ளது. இந்த விசிறிப்பாறைக்கு மிக அருகிலேயே மிகப்பெரிய மலையின் அடிவாரத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆத்திலி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருவிழாவின்போது ஒரே நேரத்தில் அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடினாலும், அருகில் இருக்கும் விசிறிப்பாறை அனைவருக்கும் தெரியவாய்ப்பில்லை. ஏனெனில், விசிறிப்பாறை மற்றும் அதன் வரலாறு குறித்த எந்த அறிவிப்பும், அங்கு வைக்கப்படவில்லை என்பதுதான் இதற்கு காரணம்.உடையாநத்தம் காப்புக்காட்டுக்குள் செல்வதற்கும், விசிறிப்பாறை மற்றும் ஆத்திலி அம்மன் கோவிலை பார்ப்பதற்கும், வெளியூரை சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கின்றனர். ஆனால் உள்ளூரை சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலும், அவர்களது துணையும் இல்லாமல் வெளியூரை சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதாக அங்கு சென்றுவிட முடியாது. அந்த காட்டுக்குள் செல்லும் பாதையும் மிகவும் கரடுமுரடான நிலையில், பல்வேறு பிரிவுகளாக செல்லும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் தாய் தெய்வ வழிபாட்டின் அடையாளமான விசிறிப்பாறை, மெல்ல மெல்ல அழிந்து வருவதை தடுத்து, தொன்மையை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும். பிரதான சாலையில் அதற்குண்டான வரலாற்று அறிவிப்பு பலகையை வைப்பதோடு மட்டுமின்றி சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.