விழுப்புரம் அருகே ஒரே நாள் இரவில் 10 வீடு புகுந்து செல்போன் திருடிய நபர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடுகளுக்குள் புகுந்து செல்போன் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த செல்போன் திருடனின் உருவம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் ஒரே நாள் இரவில் 10 வீடுகளில் புகுந்து செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் ராஜன் தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட தெரு பகுதிகளில் வசிப்பவர்கள் சம்பவத்தன்று இரவு காற்றோட்டத்துக்காக தங்களது வீடுகளின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர். இதை நோட்டமிட்ட மர்மநபர், வீடுகளுக்குள் புகுந்து 15 செல்போன்களை திருடிச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்களை திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, இதுபற்றி திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மா்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி, அதனை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்ற காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் காற்றோட்டத்திற்காக இரவில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குவது பலரது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதுவே திருடர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல் ஆகி விடுகிறது. எனவே என்னதான் வெயில் அடித்தாலும் புழுக்கம் இருந்தாலும் திருடர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கவேண்டுமானால் அவசியம் கதவு ஜன்னல்களை மூடி வைப்பது மட்டும் இன்றி உரிய முறையில் பூட்டிக்கொண்டு உறங்கும்படி போலீசார் அறவுரை வழங்கி உள்ளனர்.