விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி காதலனால் வெட்டிக்கொலை
விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி காதலனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் காதல் விவகாரத்தில் காதலன் காதலியை கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகன் மகள் தரணி (19). இவரும் மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் கணேசன் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கணேசன் தரணியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கமாகவும் இருந்துள்ளது. நர்சிங் படிக்க சென்றதிலிருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் ராதாபுரம் கிராமத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று வந்த தரணியை பின் தொடர்ந்து வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து மற்றும் தலை ஆகிய இடங்களில் பலமாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்தி வெட்டில் பலத்த காயம் அடைந்த தரணி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை செய்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் கொலை செய்த வாலிபர் கணேசனை தீவிரமாக தேடி வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
காலை வேளையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம் பெண் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.