சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளது.

Update: 2022-10-01 12:56 GMT

விழுப்புரம் நீதிமன்றம்

ஓடும் பேருந்தில்  சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருநாவலூர் அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(வயது 55). தொழிலாளி. இவர் கடந்த 18.1.2022 அன்று பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அதே பேருந்தில் திருநாவலூர் பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, அவரது தாயுடன் பயணம் மேற்கொண்டார். பேருந்தில்  கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பரசுராமன் அருகில் அந்த சிறுமியை அவரது தாய் அமர வைத்திருந்தார். அப்போது அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை அந்த சிறுமி அழுது கொண்டே தாயிடம் கூறினாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சக பயணிகள் உதவியுடன் பரசுராமனை பிடித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பரசுராமனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார். 

Tags:    

Similar News