ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை
Chit Fund News -விழுப்புரம் மாவட்டத்தில் 93 பேரிடம் ஏல சீட்டு மோசடி நடத்திய இருவருக்கு 3 ஆண்டு சிறை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.;
Chit Fund News -மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி 93 பேரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்த 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஆர்.நயம்பாடி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 61), குண்டு ரெட்டியார் (83) ஆகிய இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தனர். அவர்கள் இருவரிடமும் பொதுமக்கள் 93 பேர், ரூ.41 லட்சத்து 6 ஆயிரத்தை செலுத்தினர்.
பணத்தை வசூலித்த பன்னீர்செல்வம், குண்டு ரெட்டியார் ஆகிய இருவரும், உரியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், குண்டு ரெட்டியார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம், குண்டு ரெட்டியார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.22 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்று ஏல சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் குறித்த புகார் மற்றும் கோரிக்கைகளுடன் காவல் துறையை பலர் அணுகி வருகின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விரைவாக பெற்று தந்து அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்று ஏல சீட்டு நடத்துபவர்களை அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் கண்காணித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து முடக்கினால் மட்டுமே இது போன்று மக்களை ஏமாற்றும் மோசடி வேலையில் பலர் ஈடுபட மாட்டார்கள் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்து வருகிறது.
அதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஏல சீட்டு நடத்தி மோசடி நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏல சீட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அவர்கள் கட்டிய தொகையை வழங்க வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இதனை அலட்சியப்படுத்தும் வகையில் தான் ஆங்காங்கே ஏல சீட்டு அரசு அனுமதி இன்றி நடத்தப்பட்டு வருகின்றன அதில் பலர் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்தை தொடர்ந்து அணுகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2