விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் 2.50 லட்சம் மரக்கன்றுகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை இணை இயக்குனர் பொறுப்பு பெரியசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-02 04:08 GMT

பைல் படம்.

நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு 2½ லட்சம் மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கச்செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நிலங்களின் வரப்புகளிலும், குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஈட்டி, ரோஸ்வுட், மகோகனி, மருது, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, கடம்பு உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகளும், தனியார் நாற்றங்கால் பண்ணை மூலம் 1,65,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மானியத்தில் வரப்பு முறையில் நடவு செய்ய பயனாளி ஒருவருக்கு ஒரு எக்டருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக 320 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய எக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் 1,000 மரக்கன்றுகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 2,65,000 மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை பராமரிக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகள், மரக்கன்றுகளை பெறுவதற்கு உழவன் செயலியில் பதிவுசெய்ய வேண்டும். செயலியில் உள்ள இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்து இலவச மரக்கன்று முன்பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதனுள் மரக்கன்று பெறுவதற்கான விண்ணப்பம் இருக்கும். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News