2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவானூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவானூர் அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பிரதாப், சாமுவேல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் பெருங்கற்காலத்தைய முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி, பானை ஓடுகள், 4 வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில் முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. முதுமக்கள் தாழி ½ அடி முதல் 7 அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றுச்சமவெளி பகுதிகளில் இம்முறை பரவலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
முதுமக்கள் தாழி முறையை பொறுத்தமட்டில் 3 விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று தாழியில் இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமர வைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது.
இம்முறையில் பானை பெரிய அளவினதாக இருக்கும். 2-வது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாட்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டதுபோக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மண்பாண்டத்தில் இட்டுப்புதைப்பதாகும். மற்றொரு முறையானது, இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப்புதைக்கும் முறையாகும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு, மாங்குடி பல்லாவரம், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் தொல்லியல் துறை ஆய்வுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமர வைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடியுள்ளனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள பழமையான முதுமக்கள் தாழி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.
இதுபோன்ற அகழ்வாராட்சிகள் இந்த தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ளதால் முதுமக்கள் தாழிகள் போன்று பல்வேறு பழமையான மனித குலத்தின் சமூக நாகரிக விழிபாடுகள், வாழ்க்கை முறைகள் இப்பகுதியில் கிடைக்கலாம் என இங்கு பணியாற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து, இப்பகுதியில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.