17 முறை கோரிக்கை மனு கொடுத்தும் பலனில்லை: விவசாயி தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 முறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி விவசாயி தற்கொலைக்கு முன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-09-27 11:31 GMT

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70), விவசாயி. இவர் தனது நிலத்தின் கூட்டுப்பட்டாவினை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் விரக்தியடைந்த ராம கிருஷ்ணன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பினாயில் பாட்டிலுடன் வந்தார். அவர் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அந்த பினாயில் பாட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி பினாயில் பாட்டிலை பிடுங்கினர்.

அவரை ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். அப்போது அவர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், இதன் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கோரிக்கை மனு கொடுக்க வந்த விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News