கடலூர் மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.
கடலூர் திருப்பாப்புலியூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் வீரா என்கின்ற வீராங்கையன் (30). பிரபல ரவுடியான இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் கடலூர் உழவர் சந்தையில் பழக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு கடையை மூடி விட்டு வீடு திரும்பும் போது இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வீராவை வெட்டி தலையை தனியாக எடுத்துச் சென்றனர்.
இதனை அடுத்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடியான கிருஷ்ணா என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டடார். மேலும் இந்த வழக்கில் பிரேதத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் வீரா கொலை வழக்கில் இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சாமிநாதன், ஸ்டீபன், ஜீவா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.