அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்:ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு அரசுப் பேருந்தில்10 கிலோ கஞ்சா கடத்திய நபர் விழுப்புரம் பறக்கும் படை மேற்கொண்ட வாகன சோதனையில் பிடிபட்டார்.;

Update: 2021-03-04 18:30 GMT


விழுப்புரம் செஞ்சி சாலையில் பூத்தமேடு என்ற இடத்தில் 5 பேர் கொண்ட தேர்தல்  பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அரசு பேருந்தின் உள்ளே 42 வயது மதிக்கத்தக்க கேரளாவைச் சார்ந்த பிரேம் என்ற நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் இரண்டு  பார்சல்கள்  இருந்தது.  சந்தேகத்தின் பேரில் பார்சலை பிரித்து சோதனை செய்தபோது  தலா 5 கிலோ வீதம்  மொத்தம் 10 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இரண்டு கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து அந்த  வாலிபரை அருகில் இருக்கும் கானை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்  வாலிபர் பிரேம்,  திருப்பதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அரசு பேருந்தில் 10 கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News