மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் நெல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்யும் வகையில் மாவட்டத்தில் காணை, கல்பட்டு, கயத்தூர், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து அதன் மூலம் விவசாயிகள் இடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில் கொள்முதல் செய்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்வதில் அரசு அதிகாரிகள் சுனக்கம் காட்டியதால் நெல் மூட்டைகள் அங்கேயே தங்கி பல நாட்கள் தேங்கி விடுகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் வைக்க இடமில்லாமல் அவதிப்படும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி திடீர் திடீரென பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது, இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக தினந்தோறும் திடீர் மழை பெய்து வருகிறது, இந்த மழையில் மாவட்டத்தில் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து தற்போது முளை விட்டு வீணாகி வருகிறது. இதனை தவிர்க்க தொடர்ந்து விவசாயிகள் விடுத்து வரும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.