சினிமா காட்சிபோல ஒரு நிஜ சம்பவம் : தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையில் திருமணம்
விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்;
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற திடீர் திருமணம்
விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன். இவர் பனையபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது தாய் முத்தாலம்மாள், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயின் கடைசி ஆசையாக, தனது மகன் தயாளனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என கவலையாக கூறினார்.
இதை கேட்ட மகன் தயாளன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றத்துடித்தார். உடனடியாக மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த தனது தாய் மாமன் கோனுாரை சேர்ந்த கிராம உதவியாளர் ஏழுமலை என்பவரது மகள் காயத்திரியை அவரது உறவினர்கள் தயாளனுக்கு திருமணம் செய்துவைக்க பேசி திடீர் முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் அருகிலுள்ள அம்மன் கோவிலில் மணமகள், மணமகன் மாலை மாற்றிக்கொண்டனர். காயத்திரி கழுத்தில் தயாளன் தாலி கட்டினார். அவர்களுக்கு உடனிருந்த நண்பர்கள் செந்தில், அய்யனார், மோகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் .
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர். திருமணம் ஆனவுடன் தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர். ஆனால் டாக்டர்கள் வார்டினுள் அனுமதிக்காததால் தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் . மருத்துவமனையில் நடைபெற்ற திடீர் திருமணத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு கவச ஆடையுடன் டாக்டர்கள் மணமக்களை தாயை பார்க்க அனுமதித்து இருக்கலாம் என்று அனைவரும் கூறியது போல செய்து இருக்கலாம்.