லஞ்சம் கொடுக்காததால் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி எழுதிய ஊழியர்கள்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றி எழுதிய ஊழியர்கள்
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் ராஜவேல், கார் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி தீபலட்சுமி என்பவருக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிறப்பை பதிவு செய்த ராஜவேல், பிறப்பு பதிவு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.
அப்போது சான்றிதழ் வழங்க மருத்துவமனை ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது, ஆனால் ராஜவேல் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அந்த மருத்துவமனை ஊழியர், ராஜவேலுவுக்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்கி உள்ளனர். அதில் குழந்தையின் தந்தை ராஜவேலு என்பதற்கு பதிலாக ராஜசேகர் என்று மாற்றி பதிவு செய்து சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டதற்கு சரிவர பதில் தெரிவிக்கவில்லை. இது குறித்த புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக விசாரிப்பதாக கூறி உள்ளனர்.