விழுப்புரம் அருகே இரு கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விழுப்புரம் அருகே காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு கோயில்களின் உண்டியலை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கோனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் பூசாரியான அதே கிராமத்தை சேர்ந்த கணபதி (வயது 50) என்பவர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணமும் மற்றும் கோவிலில் இருந்த அரை கிலோ வெள்ளி அலங்கார பொருட்களும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் மற்றும் அலங்கார பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் காணிக்கை பணம் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் வெண்மணியாத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த உண்டியலிலும் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் கணபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.