பட்டப் பகலில் 50 சவரன் நகை திருட்டு: விழுப்புரம் எஸ்பி நேரில் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பின்பக்கமாக நுழைந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-12-29 03:28 GMT

திருட்டு நடைபெற்ற வீட்டில் பார்வையிடும் மாவட்ட எஸ்.பி.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை சர்வீஸ் ரோட்டில் வசித்து வருபவர் ரவி(வயது 56). இவர் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். மேலும் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. துணை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி(50), ராதாபுரம் அரசு மருத்துவமனையில் கண் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மதியம் 12 மணியளவில் சாப்பிடுவதற்காக ரவி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. திறந்து கிடந்த பீரோ இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்ததுடன், துணிமணிகள் சிதறிக்கிடந்தன. தொடர்ந்து பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.17.50 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு ரவி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சோமசுந்தரம் வந்து, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றார். தொடர்ந்து மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம்பிடித்தபடி முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுரோடு பாலம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பிரபு, பிரேம் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார், திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பா.ஜ.க. நிர்வாகியின் வீட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் மத்தியில் ஒரு விதமான பீதியும் போலீசார் மத்தியில் ஒரு விதமான திணறலும் இருந்து வருகிறது. இதனால் மாவட்ட காவல்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு வந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News