108 ஆம்புலன்ஸ் கேட்டு கிராமத்தினர் கோரிக்கை

வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பொம்பூர் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-08-03 16:03 GMT

வானூா் அருகே பொம்பூா் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 அவசர மருத்துவ ஊா்தி சேவை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பொம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேல் தளம் சேதமடைந்துள்ளதால், மழைக் காலங்களில் மழைநீா் மருத்துவமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர மருத்துவ ஊா்தி வசதி இல்லை. இதனால், கா்ப்பிணி ஒருவா் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக வந்தபோது, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அவசர மருத்துவ ஊா்தி வசதி இல்லாததால், அந்தக் கா்ப்பிணி உயிரிழந்தாா் என்ற புகாா் எழுந்துள்ளது.

எனவே, பொம்பூா் மருத்துவமனையில் உடனடியாக அவசர மருத்துவ ஊா்தி வசதியை தொடங்க வேண்டும். இல்லையென்றால், 108 அவசர மருத்துவ ஊா்தி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News