விழுப்புரம் அருகே கடத்தல் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தப்பி ஓடினர்.

Update: 2022-09-23 11:17 GMT

பைல் படம்.

விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வானூர் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வந்தது. ஆனால் அதிகாரிகளை பார்த்ததும் மினிலாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக அதிகாரிகள் லாரியில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அந்த லாரியில் 102 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 5 டன் என தெரியவந்தது.

இந்த ரேஷன் அரிசி தைலாபுரம் பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கடத்தி சென்றது யார்,எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லாரி கிளியனூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News