திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் மகா தீபம் ஏற்றம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருவக்கரையில் அமைந்துள்ள வக்ரகாளி அம்மனுக்கு பௌர்ணமியை ஒட்டி மகா தீபம் ஏற்றினர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட, திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பவுர்ணமியான நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, வக்ரகாளி ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர்.
முன்னதாக வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.