விழுப்புரம் அருகே பள்ளியில் ஆசிட் கொட்டிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயம்
வானூர் அருகே கண்டமங்கலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிட் பாட்டில் தவறி விழுந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. புதிதாக வரவுள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணி இந்தப் பள்ளி வளாகத்தின் வழியாக நடைபெற்று வருகிறது. அதனால் பள்ளி வளாகத்திலுள்ள மரங்களை அகற்றுவதோடு, பள்ளிக் கட்டடத்தின் சில பகுதிகளும் இடிக்கப்படவிருப்பதாகச் கூறப்படுகிறது.
இதனால் அங்கு உள்ள வேதியியல் ஆய்வகத்தில் இருந்த உபகரணங்களை மற்றொரு கட்டடத்துக்கு மாற்ற முடிவெடுத்த பள்ளி நிர்வாகம், மாணவ - மாணவிகளைக்கொண்டே இந்தப் பணியைச் செய்து வந்துள்ளது. அவ்வாறு பள்ளி மாணவிகள் ஆய்வகப் பொருள்களை எடுத்துச் சென்றபோது ஆசிட் பாட்டில்கள் ஒன்று தவறி விழுந்து உடைந்ததில், 12-ம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு மட்டும் முகம், கண், உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி புதுவை மாநிலம், தவளக்குப்பத்திலுள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள மூன்று மாணவிகளும் லேசான காயத்துடன் பள்ளியின் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட கல்வி அலுவலரும் நேரில் பார்க்க சென்றுள்ளனர்.