குழந்தைக்கு தவறான சிகிச்சை கிளினிக்கு சீல்
வானூர் அருகே கிழியனூரில் ஐந்து வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருந்தாளுனர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு இன்று சீல் வைத்தனர்.;
விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கிளியனூர் காமராஜர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 32) இவருக்கு சஞ்சனா என்ற 5-வயது மகள் உள்ளார்.
சஞ்சனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சுகுமார் சஞ்சனாவை தைலாபுரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் கணேஷ் என்பவரின் தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தைலாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் சஞ்சனாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சுகுமார் கூறுகையில், என் மகள் சஞ்சனாவுக்கு தைலாபுரம் மருத்துவமனையில் பணிபுரியும் கணேஷ் என்பவர் அவரது கிளினிக்கில் சரிவர சிகிச்சை செய்ததால் தான் காரணம் என்று கூறி கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட கிளியனூர் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் தைலாபுரம் நான்கு வழி சாலையில் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் மித்ரன் கிளியனூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து விசாரணை அடிப்படையில் கணேஷ் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.