ஜெர்மன் பல்கலையில் தமிழ்த்துறை மூடல், அன்புமணி எம்பி வேதனை
ஜெர்மன் பல்கலையில் தமிழ்த்துறை மூடல் குறித்து வேதனை தெரிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக எம்பி அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில்,ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த்துறை நிதி நெருக்கடி காரணமாக செப்டம்பர் மாதத்துடன் மூடப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 58 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்த்துறை மூடப்படுவது வேதனையளிக்கிறது,கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை கற்பிக்கப்படுகின்றன. 50,000 தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள் கொண்ட கொலோன் தமிழ்த்துறை ஐரோப்பாவில் தமிழாராய்ச்சிக்கு கிடைத்த வரம். அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தத் துறையை பாதுகாக்க 2019-இல் ரூ.1.24 கோடி தமிழக அரசு நிதி வழங்கியது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது பல்கலைக்கழகத்தை சென்றடைவதில் ஏற்பட்ட சிக்கல் தான் தமிழ்த்துறை மூடப்படும் நிலையை உருவாக்கியுள்ளது
கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறையை காப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச வேண்டும். தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்ப் படிப்புகளும், தமிழாராய்ச்சிகளும் அங்கு தொடர்ந்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளார்.