பள்ளியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அரசு பள்ளிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் முற்றுகை
அரசு பள்ளிக்கு சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி கடந்த 2010-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது, இப்பள்ளியில் சுற்றுச்சுவர், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் மேற்கண்ட பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் டி.புதுப்பாளையம் கிராம மக்கள் பள்ளி முன்பு திரண்டு, பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக்கு சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்தத திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.