மின் வினியோக வளர்ச்சித் திட்டத்தை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஐந்து ஊரில் மின் வினியோக திட்ட பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம், ஆயந்தூர் ஊராட்சியில் (18.06.2022) இன்று சனிக்கிழமை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோக வளர்ச்சி திட்டம் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக வளர்ச்சி திட்டத்தினை துவக்கி வைத்து பேகையில்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 3,500 விவசாயிகள் பயன்பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், தற்பொழுது தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் 16.355 கி.மீ நீளத்தில் மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோக வளர்ச்சிதிட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயந்தூர், ஆ.கூடலூர், குயவன் காடுவெட்டி பகுதியினை சேர்ந்த 7,100 பயனீட்டாளர்கள் பயனடைவர். மேலும், இப்பகுதியினை சேர்ந்த 600 விவசாயிகள் பயன்பெறுவதுடன், 1200 ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும். இவ்வாறு திட்டங்கள் செயல்படுத்துவதனால் இப்பகுதியில் வேளாண் வளர்ச்சி தன்னிறைவு பெறுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி, ஆயந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமாதேவி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்தரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.