அதிக ஆசையால் ஏமாந்த மக்கள்: ஆட்சியரிடம் கோரிக்கை
நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த கண்டாச்சிபுரம் பகுதி மக்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர்.
அதில் வேலூரை தலைமையிடமாகக் கொண்ட தனியாா் நிதி நிறுவனம், விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தில் அதன் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு முகவா்களாக இருந்தவா்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் 2 முதல் 3 மடங்கு வரை வட்டி தருவதாகக் கூறினா். சுற்றுவட்டார பகுதி மக்கள்இதை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தினா்.
முதல் இரு ஆண்டுகள் தொகையை முறையாகக் கொடுத்தனா். அதன்பிறகு, முதிா்வு காலம் முடிந்தும் பணத்தை தரவில்லை. விசாரித்ததில், அந்த நிறுவனம் சுமாா் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. ஆகவே, உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனா்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ஆட்சியரகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.