விழுப்புரம் அருகே கோரையாற்று தரைப்பாலம் சேதம்

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-08-29 12:50 GMT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில், அதன் கிளை ஆறான கோரை ஆற்று தரை பாலம் சேதமடைந்தது.

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் கர்நாட காவிலும் இந்த மழை பெய்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கட்டு வேகமாக நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு, உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் ஓடுகிறது,

இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் வழியாக மாரங்கியூரில் உள்ள கோரை ஆறு தரைப் பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் கோரை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமானது. இந்த பாலம் உடைந்ததால் மாரங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி பையூர் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் உடைந்த பாலம் குறித்தும் அதனை சீர் செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்கள் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டாம் என பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். 

Tags:    

Similar News