விழுப்புரம் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் ?

விழுப்புரம் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-04-19 08:00 GMT

சென்னை, ஈக்காட்டு தாங்கலை சேர்ந்தவர் சிவன் (45), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் ஞாயிற்றுக்கிழமை (18ம் தேதி) தன்னுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சென்னையை சேர்ந்த வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் விழுப்புரம் வந்தார்.

பகல் 2:30 மணியளவில் விழுப்புரம் புறவழிச் சாலையில் உள்ள ஓட்டலில் சிவன் உள்ளிட்டோர் சாப்பிட்டனர். அப்போது, அங்கு வந்த மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ், சிவனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்.

பின்னர் நிலம் பார்க்க செல்வதாக நாகராஜ் தனது காரில் சிவன் மற்றும் ராஜேந்திராவை ஏற்றிக்கொண்டு கண்டாச்சிபுரம் நோக்கி புறப்பட்டார். அந்த காரை, பின் தொடர்ந்து வெங்கடேசன் உள்ளிட்டோர் சென்றனர். மாலை 5:00 மணிக்கு, கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்றது,

அப்போது மற்றொரு காரில் வந்த, மர்ம நபர்கள் ஐந்து பேர் நாகராஜ் காரை மடக்கினர். பின், துப்பாக்கி முனையில் சிவன் மற்றும் ராஜேந்திராவையும் காரில் கடத்தி சென்றனர். அந்த காரை பின் தொடர்ந்து நாகராஜ் தனது காரில் சென்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டாச்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். சிவன் மற்றும் ராஜேந்திராவை போனில் போலீசார் தொடர்பு கொண்டனர்.

அப்போது, சிவன் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தொழில் தொடர்பாக டீலிங் பேசுவதாகவும், தாங்களே வந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ராஜேந்திராவோ, சேலம் அருகில் சென்றுவிட்டதாக கூறினார். ஆனால், அவர்களின் மொபைல் போன் டவர்களின் சிக்னல் கண்டாச்சிபுரம் காட்டுப் பகுதியை காட்டியது. அதனால், கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள காடுகளில், எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News