லஞ்சம் வாங்கிய திண்டிவனம் சார்பதிவாளர் கைது
திண்டிவனத்தில் ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது உடந்தையாக இருந்த பத்திர எழுத்தரும் சிக்கினார்;
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ்(வயது 43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்வதற்காக திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
ஆனால் பத்திரப்பதிவு செய்ய அங்கிருந்த அதிகாரி ஒருவர், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், லஞ்சம் கொடுக்க விரும்பாததால், பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் பிரகாஷ் திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த பத்திர எழுத்தரான திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சேர்ந்த சரவணன்(41) மூலமாக சார்பதிவாளர்(பொறுப்பு) சங்கரலிங்கத்திடம்(59) ரூ.50 ஆயிரத்தை பிரகாஷ் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார், லஞ்ச பணத்துடன் சங்கரலிங்கத்தையும், சரவணனையும் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.