நூதன முறையில் திருட்டு: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு; தாெடர் சம்பவத்தால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடரும் நூதன திருட்டால் பாெதுமக்கள் அதிர்ச்சி;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட செண்டூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தாமரைக் கண்ணன். இவர் தனது மனைவி ஜெயந்தியுடன் வீட்டில் இருந்தார். அப்பொழுது மருந்து விற்பதுபோல் செந்தாமரைக்கண்ணனின் வீட்டிற்கு வந்த ஆசாமி ஒருவர், வீட்டில் யாருக்கேனும் கை, கால், உடம்பு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் மாத்திரைகள் மூலம் சரி செய்வதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெயந்தி எனக்கு கை, கால், இடுப்பு வலி உள்ளது என்றும், அதனை சரி செய்ய மருந்து தருமாறு கூறி உள்ளார். உடனே அந்த இளைஞர் ஜெயந்தியின் கையை பிடித்து பார்த்து உங்களுக்கு யாரோ செய்வினை செய்துள்ளனர். ஆகவே உங்களிடம் ஏதாவது நகை இருந்தால் கொடுங்கள் அதனை உங்கள் ஊர் எல்லையிலுள்ள 3 கோவில்களில் பூஜை செய்து கொண்டு வந்து கொடுக்கிறேன்.
பின்னர் அதனை நீங்கள் அணிந்து கொண்டால் அனைத்து வலிகளும் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். அந்த இளைஞர் கையை பிடித்த நொடியில் சுய நினைவை இழந்த ஜெயந்தி வீட்டிலிருந்த இரண்டு சவரன் தங்க நெக்லஸை எடுத்து வந்து அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அந்த இளைஞர் 10 மணிக்குள் இந்த நகையை பூஜை செய்து உங்கள் வீட்டிற்கு எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன், மனைவி இருவரும் அக்கம்பக்கத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செண்டூர் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற நூதன கொள்ளை, இருசக்கர வாகனத் திருட்டு என தொடர்ச்சியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு துணி சோப்பு வியாபாரம் செய்வது போல் ஜெயந்தியின் வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள் மருந்து விற்கும் வாலிபர் ஒருவர் மந்திரித்தால் தான் வீட்டில நல்ல விஷயங்கள் நடக்கும் என ஜெயந்தியை மூலை சலவை செய்து சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.