மாணவி சாவில் மர்மம் இருப்பதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
மயிலம் அருகே கொங்கரபட்டில் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் ரம்யா(வயது 14). இவர், அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென மாயமானார். இது குறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகளை 17 வயது சிறுவன் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை காலையில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது விவசாய கிணற்றில் ரம்யா பிணமாக மிதந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். மாணவியை சில வாலிபர்கள் கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும், அவர்களை கைது செய்யக்கோரியும் செஞ்சி- திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், செஞ்சி காவல் ஆய்வாளர் சக்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கிணற்றில் மிதந்த மாணவி ரம்யாவின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் கொலை செய்த வாலிபர்களை கைது செய்த பிறகே மாணவியின் உடலை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அதற்கு போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,மேலும் மாணவி இறந்தது தொடர்பாக 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை அந்த மாணவி உடல் மருத்துவமனையில் இருந்து வீீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது, இந்நிலையில் உடலை வாங்க மறுத்து மறியல் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கீதா தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.சித்ரா, மயிலம் ஒன்றியம் செயலாளர் எ.சத்தியகலா, ஒன்றியக்குழு நிர்மலா, கிளை செயலாளர் அல்லிராணி, சுகுனா, அங்கன்வாடி மாவட்ட செயலாளர் மலர்விழி, மாவட்டதுணை செயலாளர் கோவிந்தமாள். வழக்கறிஞர் அய்யப்பன் ஆகியோர் இறந்த மாணவயின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர், அப்போது மாணவியின் மர்ம மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள், மற்றும் கொலைகள் நடக்கிறது, இதனை உடனடியாக அரசும் மாவட்ட நிர்வாகமும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுமாதிரியான பெண்கள மீீதான வன்கொடுமைகளை இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.